அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று மருந்து கொடுத்த போலீசார்!

307

தமிழகத்தில்………

தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில் வெளியே சென்று வருவதை பார்க்க முடிகிறது.

இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் , தன் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்குவதற்காக ஊரடங்கு நேரத்தில் மருந்து கடைக்குச் சென்றுள்ளார். வழியில் அவரை நிறுத்திய போலீஸ் துறையினர் தலை கவசம் அணியாமல் செல்வதற்காக அபராதம் என்று கூறி அவரிடம் இருந்த 500 ரூபாயை வாங்கிவிட்டு அனுப்பியுள்ளனர்.

இதனால் மிகவும் மனவேதனையடைந்த பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்த நாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம்.

மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ரூ 500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டுஅனுப்புறாங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். பாலாஜியின் பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்த தகவல் அறிந்த முதல்வர் மு .க .ஸ்டாலின், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில், காவல் துறையினர் பாலாஜி வீடு சென்று அவரின் மகனுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கித் தந்துள்ளனர். மேலும், அபராதமாக வாங்கிய ருபாய் 500 ஐ திருப்பி கொடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து, பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.