அம்பானி வீட்டு திருமணத்தை விட அதிகம் வியக்க வைத்த சாதாரண நபர் திருமணம் : அப்படியென்ன சுவாரசியம்?

1022

சாதாரண நபர் திருமணம்

அம்பானி வீட்டு திருமணம் டிரண்டிங்கில் இருக்கும் சமயத்தில் சாதாரண குடிமகன் ஒருவர் தனக்கு நடந்த திருமண நிகழ்வை சுவாரசியமாக பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த முக்கிய பிரபலங்களின் பிரம்மாண்ட திருமணங்கள் இந்தாண்டு பலரை வியக்க வைத்தது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி – ஆனந்த் பிரமல் திருமணம், நடிகை தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம், நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம் அதிகளவில் பேசப்பட்டது. அதிலும் முக்கியமாக அம்பானி வீட்டு திருமணம் பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்தது.

இந்நிலையில் ரிஸ்வன் பெயில்வான் என்ற நபர் தனக்கு சமீபத்தில் நடந்த திருமணத்தை சுவாரசியமாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், என் திருமணம் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தான் நடந்தது. இதில் என் பெற்றோர், நண்பர்கள் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கான செலவு ரூ.20,000. சிக்கன், அல்வா, ஸ்டாபெரி போன்ற உணவுகள் விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்டது. எங்கள் வீட்டருகில் உள்ள தேர்தல் கமிட்டி அலுவலகத்தில் 25 நாற்காலிகளை கடனாக வாங்கி வந்து தான் அனைவரையும் உட்கார வைத்தோம்.

நானும் என் மனைவியும் நீல நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தோம். அதை கூட என் அம்மாவும், சகோதரியும் தான் பரிசாக கொடுத்தார்கள்.

இப்படி தான் என் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மகிழ்ச்சி பொங்கியது. திருமண நிகழ்வு என்பது பெரிதாக நடக்கிறதா அல்லது சிறியதாக நடக்கிறதா என்பது பெரிய விடயமில்லை. அங்கு உண்மையான சந்தோஷம் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். ரிஸ்வனின் இந்த பதிவு பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.