ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலி…. கதறியழுத காதலன் கூறியது என்ன?

657

கேரள மாநிலத்தில் அடுத்த நாள் திருமணம் என்ற ஆனந்த வெள்ளத்தில் இருந்த காதல் கதை, ஒரு கண்ணீர் கதையாக மாறியுள்ளது.

கேரள மாநிலம் கோயிலண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான இவர் உத்தரப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார். மலப்புரம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் தான் ஆதிரா (22). இவர் கோழிக்கோட்டில் உள்ள மஞ்சரி மெடிக்கல் கல்லூரி டயாலிஸ் மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என மஞ்சரி மெடிக்கல் கல்லூரி டயாலிஸ் மையத்திற்கு அழைத்துச் சென்றார் பிரிஜேஷ். அப்போது தான் பிரிஜேஷ்க்கு அறிமுகம் ஆனார் ஆதிரா.

தாயை மருத்துவ சோதனைக்கு அவ்வப்போது பிரிஜேஷ் அழைத்து வர, ஆதிராவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் அதிகரித்தது. இந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. ஒரு ஆண்டிற்குப் பிறகு பிரிஜேஷின் தாய் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தது காதலி ஆதிராதான்.

இதையடுத்து ஆதிராவை தான் காதலிப்பது தொடர்பாக பிரிஜேஷ் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். ஆதிரா வேறு (ஓபிசி) சமூகத்தை சேர்ந்தவர் என்றும், தாம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தினர், பின்னர் பிரிஜேஷின் காதல் ஆழத்தை புரிந்துகொண்டு திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

ஆனால் ஆதிராவின் வீட்டில் அப்படியல்ல, விஷயம் தெரிந்தால் பூகம்பமே வெடிக்கும் என்ற நிலை இருந்துள்ளது. அவரது தந்தை ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது ஆதிராவுக்கும் தெரிந்துள்ளது.

பிரிஜேஷ் உங்கள் வீட்டில் கூறிவிட்டாயா என ஆதிராவிடம் கேட்டுக்கொண்டே இருக்கே, தெரிந்தவர்கள் மூலம் ஆதிராவின் காதல், அவரது தந்தையின் காதுக்கு சென்றுள்ளது. உடனே ஆதிராவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

முதலில் பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, அப்படி இப்படி என ஏதோ குறை சொல்லி சமாளித்துவிட்டார் ஆதிரா. அதற்குள் அடுத்த மாப்பிள்ளையை அவரது தந்தை பார்க்க, விஷயத்தை போட்டு உடைத்தார் ஆதிரா. அவ்வளவு தான் ஒட்டுமொத்த குடும்பமே கொந்தளித்துள்ளது. உயிரே போனாலும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். உன்னை கொன்றாலும் கொல்வேனே தவிர அவனுக்கு திருமணம் செய்துவைக்க மாட்டேன் என்று கொதித்துள்ளார் தந்தை.

இந்த விஷயத்துக்கு முடிவுகட்ட நினைத்த ஆதிராவின் தந்தை, பிரிஜேஷை அழைத்து நேரடியாக மிரட்டியுள்ளார். ஆனால் பிரிஜேஷ் நான் திருமணம் செய்தால் உங்கள் பெண்ணைத் தான் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் ஆதிராவுக்கு நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கியது. ஆதிரா பணிக்கு செல்வது, நடவடிக்கைகள், போன் அழைப்புகள் என அனைத்தும் தந்தையின் கவனிப்புக்குக் கீழ் வந்துள்ளது.

நெருக்கடியை பொறுக்க முடியாத ஆதிரா, ஒருவாரம் அலுவலகத்திற்கு விடுப்பு கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அந்த நேரத்தில் பிரிஜேஷ் உத்தரப் பிரதேசத்தில் இருந்தார். எனவே பிரிஜேஷ் வீட்டுக்கு போகாமல், தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ஆதிரா.

மகள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என அறிந்த தந்தை, பொலிஸாரிடம் மகளை காணவில்லை என்றும், பிரிஜேஷ் தான் கடத்திச் சென்றுவிட்டார் என்றும் புகார் அளித்துள்ளார். மலப்புரம் காவல்நிலையத்திலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு போன் செய்து பிரிஜேஷ் நீங்கள் ஆதிராவை, அவரது தந்தையிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிஜேஷ்க்கு வந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான் ஆதிராவை அழைத்து வரவில்லை. அவள் வேறு எங்கோ தங்கியிருக்கிறார் என்றார் பிரிஜேஷ். நீங்கள் ஆதிராவை அழைத்து வாருங்கள். அவரது தந்தை திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று பொலிஸார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே பணிக்கு 45 நாட்கள் விடுமுறை கூறிவிட்டு திருமணக் கனவுகளுடன் கேரளா புறப்பட்டார் பிரிஜேஷ். அடுத்த ஓரிரு நாளில் காவல்நிலையத்திற்கு பிரிஜேஷும், ஆதிராவும் வந்து சேர்ந்தனர். அத்துடன் ஆதிராவின் தந்தையும், உறவினர்களும் வந்திருந்தனர். திருமணத்திற்கு தடையாக இருக்கமாட்டன், விரைவில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் ஆதிராவின் தந்தை.

ஆனால் ஆதிராவுக்கு நம்பிக்கை இல்லை, அதேசமயம் தந்தையுடன் செல்லவும் பயமாக இருந்துள்ளது. நான் போகல எனக்கு பயமா இருக்கு வேணாம் என்று பிரிஜேஷிடம் கூறியுள்ளார். உனது தந்தை திருமணத்திற்கு முழு சம்மதம் தெரிவித்துவிட்டார், அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிஜேஷும், ஒன்றும் ஆகாது நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் கூறி தந்தையுடன் ஆதிராவை அனுப்பி வைத்துள்ளார்.

5 நாட்களில் திருமணம் என்று இருதரப்பினரும் பேசி முடிவெடுத்துள்ளனர். இறக்கை இன்றி வானில் பறக்கும் அளவிற்கு மகிழ்ச்சியை அடைந்தனர் ஆதிராவும், பிரிஜேஷும். திருமணத்திற்கு தாலி, நகைகள், துணிகள் என அனைத்தையும் பார்த்து, பார்த்து வாங்கிக்கொண்டிருந்தார் பிரிஜேஷ். திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஆதிராவிடம் இருந்து பிரிஜேஷ்க்கு செல்போன் அழைப்பு வந்தது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் அப்பா பேச்சே சரியில்லை. அவர் என்ன ரொம்ப மிரட்டுறார். திருமணம் எல்லாம் நடக்காதுனு கூறுகிறார். குடிச்சுட்டு வந்து ரொம்பா கோபமா பேசிட்டு இருக்கார் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிஜேஷ் சரி நான் பேசுறேன். நீ பயப்பிடாதே என தைரியம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆதிராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தந்தை, ஒருகட்டத்தில் கத்தியால் அவரை குத்துவதற்கு விரட்டியுள்ளார். ஆதிரா அலறியடித்து வீட்டை விட்டு வெளியில் ஓடினார். அருகில் இருந்த உறவினர் வீட்டுக்குள் ஓடிய அவரை, விடாமல் துரத்தினார் ராஜன். பின்னர் அந்த வீட்டின் கிச்சனில் சிக்கிக்கொண்ட ஆதிராவின் நெஞ்சில் கத்தியால் ஓங்கிக் குத்தினார் ராஜன்.

இதில் ரத்த வெள்ளத்தில் ஆதிரா சரிந்தார்.இதைக் கண்டதும் அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு ஓடிவிட்டார் ராஜன். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆதிராவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தந்தை அடித்ததால் ஆதிராவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிரிஜேஷுக்கு தகவல் வந்துள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற பிரிஜேஷ் மனம் நொறுங்கி அதிர்ச்சியில் உரைந்து போனார். அவர் அங்கு பார்த்தது ஆதிராவை அல்ல. அவரது சடலத்தை தான். கண்ணீருடன் கதறி அழுத பிரிஜேஷ், காவல் நிலையத்தில் இருந்து அப்பவே போகமாட்டேன் சொன்னாளே, நானே அனுப்பிட்டனே என்று கதறியுள்ளார்.

இதையடுத்து ஒருவாரத்திற்கு உணவு உண்ணாமல் பிரிஜேஷின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தங்கள் மருமகளை இழந்துவிட்டதாக துயரத்தில் உறைந்துள்ளனர் பிரிஜேஷ் குடும்பத்தினர். ஆதிராவின் தந்தை ராஜன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணம் ஆகி தனது புது மனைவியுடன் ராணுவ குடியிருப்பில் குடியேறலாம் என காத்திருந்த பிரிஜேஷ், உலகத்தையே வெறுத்த நிலையில் உள்ளார்.