ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்.. ஊசி போட்டு கொன்னுட்டாங்க.. கதறிய சிறுமியின் தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!

1205

சென்னை….

சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – வசந்தி தம்பதியின் மகள் நந்தினி (15). பள்ளி மாணவியான இவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குடற்புண் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி நந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு சிறுமிக்கு செவிலியர்கள் ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தனது மகள் உயிரிழந்துவிட்ட செய்தியை கேட்ட சிறுமியை தாய் கதறி அழுதுள்ளார். ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகளை ஊசி போட்டு கொன்று விட்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், சிறுமியின் உடல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுமியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.