கன்னியாகுமரி…….
கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கே அண்டை மாநில மக்கள் துவங்கி வெளிநாட்டு பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு தனது இன்ஸ்டா தோழியுடன் சுற்றுலா சென்றிருந்த நபருக்கு அந்த பெண்ணே ஷாக் கொடுத்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். 52 வயதான இவர் பழைய கார்களை வாங்கி அவற்றை வியாபாரம் செய்து வருகிறார். சமூக வலை தளங்களில் இவர் பயங்கர ஆக்டிவாக இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பெண் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
அப்போது தனது பெயர் சத்யா என அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இருவரும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பேசி வந்ததாக தெரிகிறது.
இதனிடையே, அண்மையில் ஒருநாள் தான் கன்னியாகுமரி செல்ல இருப்பதாக ஆல்பர்ட் தெரிவித்திருக்கிறார். அப்போது, தன்னையும் அழைத்துச் செல்ல முடியுமா? என சத்யா எனும் பெயர்கொண்ட அந்த பெண் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் ஜோடியாக கன்னியாகுமரி சென்றுள்ளனர். அங்கே, லாட்ஜில் இருவரும் தங்கியதாக கூறப்படுகிறது.
அடுத்தநாள் காலை எழுந்த ஆல்பர்ட்டிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது தோழியை காணாததால் சந்தேகமடைந்த ஆல்பர்ட், அப்போதுதான் அவரது செயின் மற்றும் இரண்டு மோதிரங்களை காணவில்லை என்பதையும் நோட்டீஸ் செய்திருக்கிறார். காணாமல்போன நகையின் மதிப்பு 9 சவரன் என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, லாட்ஜ் பணியாளர்களிடம் இதுகுறித்து அவர் விசாரிக்க அவர்களுக்கு ஏதும் தெரியாததால் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், 9 சவரன் நகையுடன் ஓட்டம் பிடித்ததாக சொல்லப்படும் இளம்பெண்ணை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.