கல்லூரி மாணவி திடீர் தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!

257

தென்காசி…

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவர் கணவர் கணேசன் இறந்துவிட்ட நிலையில் மகள் இந்து பிரியாவுடன் (18) தனியாக வசித்து வருகிறார்.

இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மாடத்தி மகளை கல்லூரிக்கு செல்வதற்காக எழுப்பி விட அவரது அறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு இந்துபிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட தாய் மாடத்தி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இந்துபிரியா உடலை கீழே இறக்கினர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை  புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் மாணவி இந்து பிரியா நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அழைத்த பேராசிரியர் ஒருவர், கல்லூரிக்கு அனுமதியின்றி செல்போன் கொண்டுவந்துள்ளாய். எனவே ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து பிரியா, தான் செல்போன் கொண்டு வரவில்லை என்றும், வேறு மாணவிதான் செல்போன் கொண்டு வந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனாலும், அந்த பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் சேர்ந்து அந்த மாணவியை திட்டி, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வந்த நிலையில், இந்துபிரியா அறையில் 2 பக்கத்தில் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், நான் செய்யாத தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி விட்டனர்.

எனவே நான் தற்கொலை செய்கிறேன் எனவும் எனது சாவுக்கு ஒரு பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும், கடிதத்தின் கடைசி குறிப்பில், ” நான் யாரையும் காதலிக்கவில்லை, லவ் பண்ணி அவங்க விட்டுபோனாங்கன்னு சாகல.. லவ் பண்ணவே இல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர் ஆசிரியர் பேராசிரியர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.