திருச்சி….
திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தேவராஜ் வெளியூரில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் அவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டதாகவும், வீடு முழுவதும் ரத்தம் சிதறி கிடைப்பதாகவும் தேவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்து நேரில் சென்று உள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மாடிப்படிகளில் ரத்த துளிகள் சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தம் சிதறி இருந்துள்ளது, ஆனால் சடலங்கள் ஏதும் இல்லை. இதனால் கொலையாளிகள் சடலத்தை கையோடு தூக்கி சென்று விட்டனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது துரைபாலன் என்ற இளைஞர், தனக்கு இந்த கொலை குறித்து செல்போனில் தகவல் வந்ததாக போலீசாரிடம் தானாக வந்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், சிதறிக் கிடந்தது ஆட்டுக்கிடா ரத்தம் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் தேவராஜிக்கு போன் செய்ததே துரைபாலன்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து துரைபாலனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில், அப்பகுதியில் பேக்கரி நடத்தி வந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனது முறைப்பெண்ணை திருமணம் செய்துகொண்டு தேவராஜ் வீட்டில் வாடகைக்கு குடி இருந்துள்ளார்.
துரைபாலன் அந்த பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அடிக்கடி பேக்கரி ஓனர் வீட்டுக்கு சென்றபோது அவரது மனைவியுடன் முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் மாமனார், மாமியாரை அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளார், இதனை மீறியும் ரகசிய காதலர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதனால் பேக்கரி உரிமையாளர் கடையை மூடிவிட்டு, யாரிடமும் சொல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் தனது ரகசிய காதலியின் தொடர்பு இல்லாமல் துரைபாலன் சுற்றி வந்துள்ளார். இதனை அடுத்து பேக்கரி உரிமையாளரின் குடும்பம் கொல்லப்பட்டு விட்டதாக வதந்தி பரப்பினால்,
காவல் நிலையத்துக்கு அப்பெண் குடும்பத்துடன் வருவார் என துரைபாலன் எண்ணியுள்ளார். அப்போது அவரது செல்போன் எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என துரைபாலன் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அருகில் உள்ள இறைச்சி கடைக்கு அதிகாலையிலேயே சென்று ஆட்டுக்கிடா ரத்தத்தை பிளாஸ்டிக் பையில் வாங்கி வந்து வீட்டுக்குள் தெளித்து இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து துரைபாலனை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலியை பார்ப்பதற்காக காதலன் கொலை நாடகம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.