காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!

479

சேலம்….

பேஸ்புக் மூலம், நட்பாக பழகி, பின்னர் காதலித்து இறுதியில் திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் கணவர் – மனைவியாக வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு, இலங்கையைச் சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், மற்ற யாருக்கும் தெரியாமல் சரவணன் மற்றும் நிஷாந்தினி ஆகியோர், சுமார் 5 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர். தொடர்ந்து, காதல் மிதப்பிலேயே இருந்து வந்த அவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இலங்கையைச் சேர்ந்த நிஷாந்தினி, காதலனின் கரம் பிடிப்பதற்காக, கடல் மலைகளைத் தாண்டி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், டூரிஸ்ட் விசா மூலம் சேலம் வந்தடைந்துள்ளார்.

பின்னர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, ஓமலூர் அருகேயுள்ள பஞ்சுகாளிப்பட்டியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணமும் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருமணமான சந்தோஷத்துடன், தங்களின் திருமணத்தை பதிவு செய்ய அரசு அலுவலகத்தை நாடிய போது, அதில் ஒரு சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, தடையில்லா சான்று கேட்டு, அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அடுத்து செய்வது என்பது தெரியாமல், புது காதல் திருமண ஜோடிகள் திணறி போயுள்ளது.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். விசா காலம் முடிவடையும் நிலை உருவாகியுள்ளதால், காதல் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமலும் திணறி வருகிறார் நிஷாந்தினி.

இத்தனை தடைகள் கடந்து, காதல் திருமணத்தில் முடிந்த போதும், தங்களின் முன்பு எழுந்துள்ள சட்ட சிக்கலினால், நொந்து போயுள்ளனர் காதல் ஜோடிகள். தங்களின் திருமண பத்திரிகையை இணைத்து, மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை பிரித்து விட வேண்டாம் என்றும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிகளை செய்ய வேண்டும் என்றும், நிஷாந்தினி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.