இளம்பெண்..
காதலித்து அன்னியோன்யமாக பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ரத்திகா(26).
பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஆத்தூரான் வட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் கோசல்ராமன் (23). இவர் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ரத்திகாவுக்கு சொந்தமான வீட்டில் கோசல்ராமன் வாடகைக்கு தங்கியிருந்தாராம். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது கோசல்ராமன் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ரத்திகா, ஜோலார்பேட்டை அருகே உள்ள கோசல்ராமனின் பெற்றோரிடம் முறையிட்டார். ஆனால் அவர்களும் இதை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் ரத்திகா, கடந்த 13 நாட்களாக கோசல்ராமன் வீட்டு அருகே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோசல்ராமனின் தந்தை தனபால், கடந்த 2 நாட்களுக்கு முன் ரத்திகாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த ரத்திகா சானிடைசர் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதிமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரத்திகா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து தனபாலை நேற்று முன்தினம் கைது செய்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் ரத்திகா, கோசல்ராமனின் வீட்டு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவரது உறவினர்கள், ரத்திகா வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ரத்திகா திருப்பத்தூர்-புல்லானேரி சாலையில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார், ரத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பறிமுதல் செய்த செல்போனை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். செல்போன் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இச்சம்பவம் சென்னையில் நடந்திருப்பதால் அங்கு சென்று புகார் தருமாறும் போலீசார் கூறி ரத்திகாவை நேற்றிரவு சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.