மத்திய பிரதேசத்தில்…
மத்திய பிரதேசத்தில் மது குடிக்க காசு தராததால் காதலியின் மூக்கை காதலன் வெட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் வாழ்வில் இருந்த பெண்ணின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
கந்த்வா மாவட்டத்தில் உள்ள பமங்கான் பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 35 வயதான சோனு என்ற பெண் லவ்குஷ் என்ற நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே சோனுவின் கணவர் இறந்ததை அடுத்து தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். லவ் குஷ் உடனான பழக்கத்தில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். எந்த பணிக்கும் செல்லாமல் லவ் குஷ் மது அருந்துவதையே வழக்கமாக கொண்டிருந்தவராம்.
சம்பவத்தன்று வழக்கம் போல் சோனுவிடம் லவ் குஷ் குடிப்பதற்கு 200 ரூபாய் காசு கேட்டிருக்கிறார். அப்போது பணம் தருவதற்கு சோனு மறுத்ததால் ஆத்திரத்தின் சோனுவின் மூக்கை கோடாரியால் வெட்டியிருக்கிறார் லவ் குஷ்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூக்கறுந்த வலியால் துடித்துக்கொண்டிருந்த சோனுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் காவல்துறைக்கு சென்றிருக்கிறது.
இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட கந்தவா மாவட்ட கத்வாலி காவல்துறை அதிகாரி பல்ஜித் சிங் பைசென் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் மூக்கை அறுத்த லவ் குஷ்-ஐ கைது செய்திருக்கிறார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.