காதலி பேச மறுத்ததால் காதலி வீட்டு முன்பு இன்ஜினியர் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

1168

விருதுநகர்…….

விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24). துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார்.

தேவகுமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த தேவகுமார் தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த தேவகுமார் காதலியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து, தன்னுடன் பேசுவதை கைவிடுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் தேவகுமார் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று காதலி பேச மறுத்ததால் விரக்தியடைந்த தேவகுமார் காதலியின் வீட்டின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தந்தை கோவில் பிச்சை அளித்த புகாரின் அடிப்படையில் வாச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.