காலில் விழுந்து பட்டியலின மக்கள் மன்னிப்பு கேட்ட விவகாரம் : 2 பேர் அதிரடி கைது!!

281

விழுப்புரம்………….

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எடுத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர்.

இது தொடர்பான படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனக் குரலை எழுப்பினர். இது தொடர்பாக ஒட்டனந்தல் என்கின்ற கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரின் காரின் முன்பு அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்த பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பின்னர் ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் மற்றும் சீதாராமன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர் மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தை சுற்றி காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.