ரயில் விபத்தில் கால்களை இழந்த காதலனை, பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி மாணவி ஒருவர் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்துள்ளது.
காதல் என்பது உடல் சார்ந்த விஷயமல்ல அது ஓர் உணர்வு என்றெல்லாம் சினிமாவில் வசனம் வரும். ஆனால் சினிமாவை மிஞ்சிய சம்பவம் மூலம் தனது காதல் வலுவானது என கல்லூரி மாணவி ஒருவர் நிரூபித்துள்ளார்.
நிலை மாறும் போது குணம் மாறும் காதலன் அல்லது காதலியின் பிரிவைத் தாங்க முடியாதவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கதான் செய்கின்றன.
.ஆனால் முன்னுதாரணமாக ஒரு மாணவி தனது காதல் உடல் சார்ந்த விஷயமல்ல அது அதையும் கடந்தது என்று நிரூபித்துள்ள சம்பவம் வேலூர் வாணியம்பாடியில் நடந்துள்ளது.
உதகமண்டலம் மசினக்குடியை சேர்ந்தவர் ஷில்பா (18). இவர் கோவையில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வேலூரைச் சேர்ந்த மாணவர் விஜய்யும் படித்து வந்தார். இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் விரும்பி மனப்பூர்வமாக காதலித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்துள்ளது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் பின்னர் ஷில்பா-விஜய்யின் மனஉறுதியைக் கண்டு அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்துள்ளனர்.
திருமணமாகப் போகும் சந்தோஷத்தில் ஆனந்தமாகத் திரிந்த ஷில்பா- விஜய் ஜோடி வாழ்க்கையில் அந்த சம்பவம் பெரும் இடியாய் விழுந்தது. வேலூரில் ரயிலில் பயணம் செய்து வந்துகொண்டிருந்த விஜய் அதிலிருந்து கீழே விழுந்தார். உயிர் போகும் அளவுக்கு படுகாயம் அடைந்த அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உயிர் பிழைத்தார். ஆனாலும் இடது கால் துண்டிக்கப்பட்டது. வலது கால் செயலிழந்தது.
இரண்டு கால்களும் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளியாகிப்போன விஜய்யின் நிலையைப் பார்த்து ஷில்பாவின் பெற்றோர் பரிதாபப்பட்டனர். ஆனாலும், ‘இனி விஜய்யை மருமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் ஷில்பாவிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.
இந்நிலையில் விஜய்யும், ‘இனி என்னால் உனக்கு நல்ல கணவனாக இருக்க முடியாது. என்னை மணந்து உன் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ள வேண்டாம். என்னை மறந்து வேறு ஒருவரை மணந்து உன் வாழ்க்கையையாவது சந்தோஷமாக அமைத்துக்கொள்’ என்று கூறியுள்ளார். ஆனாலும் யார் சொல்வதையும் ஷில்பா ஏற்றுக்கொள்ளவில்லை.
திருமணத்திற்கு பின் இவ்வாறு ஆகியிருந்தால் என்ன சொல்வீர்கள். ஆகவே விஜய்யைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஷில்பா உறுதியாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேலூர் வந்த ஷில்பா, விஜய்யின் பெற்றோர், உறவினர் முன்னிலையில் விஜய்யை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.