குடிபோதையின் உச்சம் : கறிவெட்டும் கத்தியுடன் தன்னைக் கொல்ல வந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி !!

335

காஞ்சிபுரம்…

காஞ்சிபுரம் மளிகைச் செட்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நவ்ஷாத், 12 ஆண்டுகளுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதலனுக்காக மதம் மாறிய ரேவதி, தனது பெயரையும் ரசியா என மாற்றிக் கொண்டார்.

9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் என மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் நவ்ஷாத்தின் குடிப்பழக்கம் குறுக்கிட்டு ரசியாவின் நிம்மதியை சீர்குலைத்திருக்கிறது.

ஆட்டோ ஓட்டுவதில் வரும் முக்கால்வாசி வருமானத்தை மதுவுக்கு செலவிட்ட நவ்ஷாத், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து ரசியாவிடம் சண்டையிடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

சமயங்களில் ஆக்ரோஷமாகும் நவ்ஷாத், ரசியாவை அடித்துத் துன்புறுத்துவார் என்றும் அதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை ரசியா பாதுகாப்பாக பக்கத்து வீடுகளுக்கு அனுப்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த நவ்ஷாத், மனைவியுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். குழந்தைகளை பக்கத்துவீட்டில் விட்டு விட்டு கணவனுடன் போராடிய ரசியாவை கொல்வதற்காக கறிவெட்டும் கத்தியைத் தூக்கிக்கொண்டு நவ்ஷாத் விரட்டியதாகச் சொல்லப்படுகிறது. பயந்து ஓடிய ரசியா குளியலறைக்குள் சென்று கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.

வெளியே கத்தியால் கதவை ஓங்கித் தட்டிக் கொண்டே இருந்துள்ளார் நவ்ஷாத். ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த ரசியா, கதவை வேகமாகத் திறக்கவே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் நவ்ஷாத்.

கணவனின் கையில் இருந்த கத்தியைப் பறித்த ரசியா, ஆத்திரம் தீரும் வரை அவரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கையில் கத்தியுடனும் உடல் முழுக்கத் தெறித்த ரத்தத்துடனும் சூரசம்ஹாரம் செய்த காளியைப் போல் நின்று கொண்டிருந்துள்ளார் ரசியா. பின் அங்கிருந்து நேராக கத்தியுடன் காவல் நிலையம் சென்றவர், நடந்தவற்றைக் கூறி சரணடைந்திருக்கிறார்.

தந்தை கொல்லப்பட்டு, தாயும் சிறை சென்ற நிலையில், 10 வயதைத் தாண்டாத அவர்களது இரண்டு குழந்தைகளும் நிர்கதியாகியுள்ளனர்.