நாமக்கல்..
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து உள்ளே சென்ற வடமாநில இளைஞர், அதில் இருந்து வெளியே வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டதால் பொலிஸாரிடம் சிக்கினார். குறித்த சம்பவம் தமிழக மாவட்டம் நாமக்கல்லில், அணியாபுரத்தில் நடந்துள்ளது.
நாமக்கல், அணியாபுரத்தில் ஒரு வஙகியின் ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு காவலாளிகள் யாரும் இல்லை. இதனால் அந்த பகுதியில் ரோந்த செல்லும் பொலிஸார் ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் பொலிஸார் ரோந்து பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம்-ல் இருந்து சத்தம் வருவதை அறிந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு ஒரு நபர் இயந்திரத்திற்குள் இருந்து தலையை தூக்கிப் பார்த்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவரை வெளியில் வர சொல்லி எச்சரித்தார்கள்.
ஆனால், வசமாக உடல் மாட்டிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் இயந்திரத்திற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டார். பின்னர் அதில் இருந்து அந்த திருடனை வெளியே கொண்டு வந்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அந்த கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திராய் என்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பிரளியில் உள்ள தனியார் கோழித் தீவன ஆலையில் மூட்டைத் தூக்கும் வேலைப் பார்த்து வந்ததும் பணத்தை திருட திட்டம் தீட்டி கொள்ளையடிக்க முயன்றதும் தெரிவந்தது.
பின்னர் அந்த வட மாநில தொழிலாளியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்த பொலிஸார், நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.