கோடை காலம் தொடங்கிருச்சே! கடந்து செல்ல சில டிப்ஸ்!!

655

எப்போதும் போல வழக்கமான வார்த்தைகளை நாம் இப்போதும் கடந்தபடியே இருக்கிறோம்.

போன முறையை விட இந்த முறை வெய்யில் அதிகம்ல என்றொரு கூக்குரல் ஒவ்வொரு கோடையிலும் கேட்டபடிதான் இருக்கிறது.

இதோ மற்றுமொரு கோடை, மீண்டுமொரு பருவ காலம் நம்மைக் கடக்க காத்திருக்கிறது.

வழக்கத்திற்கு மாறாக இம்முறை நாம் அதனை வரவேற்று பரஸ்பரம் கை குலுக்கிக் கடந்து போக சில குறிப்புகள் உங்களுக்காக இங்கே.

கோடை காலங்கள் பூமிக்கான சூரியனின் கொடை என்றாலும் எல்லா உயிர்களாலும் பருவ கால மாற்றங்களை சட்டென கிரஹித்துக் கொள்ள முடியாது.

பருவ காலங்களை நம் உடல் நிலைக்குத் தகுந்தாற்போல சமன் செய்து கொள்ளப் பழகிக் கொண்டோமானால் பிறகு மழையோ வெய்யிலோ புயலோ எல்லாப் பருவ காலங்களும் நமக்கான வரமாகி விடும் என்பதில் ஆச்சர்யமில்லை.

கோடை ஆரம்பித்ததை நாம் உணர்ந்து கொள்வது இயற்கையாகவே நம் உடலில் ஏற்படும் தாகத்தை கொண்டுதான்.

எப்போதும் போல கோடையிலும் நாம் சமநிலையோடு இருக்க வழக்கத்தை விட சற்று கூடுதலான சுத்தமான நீரை உட்கொள்ள வேண்டி வரும்.

நீர் என்பது நம்மை உள்ளும் புறமுமாய்த் தூய்மை செய்ய வல்லது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எனவே நீர் குடிப்போம் நோய் தவிர்ப்போம்.

வெய்யில் நேரங்களில் வரக்கூடிய வியாதிகளில் முதன்மையானது சின்னம்மை. சின்னம்மை வெகு சுலபமாகப் பரவும் தன்மை கொண்டதால் அதற்கான தடுப்பு முறைகளை நாம் கடைபிடித்தாக வேண்டும். முன்னோர் முறைகள் எல்லாம் இப்போது பிரபலம் ஆகி வருகிறது..

எந்தவித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலங்களில் இப்போதும் நாம் கடைபிடிக்க கூடிய எளிய வகையில் அவர்களது மருத்துவ முறைகள் உள்ளது என்பதால் பயமின்றி கடைபிடிக்கலாம்.

வேப்பிலை சார்ந்த அனைத்தையும் பயன்படுத்தி சின்னம்மை நோயில் இருந்து பாதுகாப்பை வெளி வரலாம். மஞ்சள் கிருமி நாசினி மற்றும் சின்ன வெங்காயம் போன்றவைகளை அவர்கள் மருந்தாக குறிப்பிடுகின்றனர்.

கோடை நேரங்களில் திடீரெனத் தாக்கும் சளி காய்ச்சல் கோடை மழை போன்றது.

இடியும் மின்னலுமாய் ஒரு காட்டு காட்டிவிட்டு போகும் கோடை மழைபோலவே இந்தக் காலத்தில் நம்மை அணுகும் சளியும் காய்ச்சலும் நம்மை சற்றே பெரிதாய் தாக்கி விட்டுத்தான் போகும்.

அதற்காக பயப்பட வேண்டாம். இயற்கை மிக அழகாக அதன் போக்கிற்கேற்ப நம் உடலைக் காக்க நமக்கான உணவுகளைத் தருகிறது.

உடல் சூடு அடையாமல் தவிர்க்க இளநீர், பதநீர், நுங்கு, தர்ப்பூசணி போன்ற பழங்களை தினமும் உட்கொள்வதன் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

கோடையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது உடல் சூடு எனும் நோய் தான், இது ஏற்படும்போது நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதேயில்லை.

சிலசமயங்களில் சிறுநீர் ரத்தம் போல வெளியேறுவதும் உண்டு. இதற்கு நம் முன்னோர் கண்ட எளிய பலன் நல்லெண்ணெய்.

சிறிது நல்லெண்ணையை எடுத்து நம் தலையின் உச்சியில் சில சொட்டுகளும் வயிற்றிலும் தடவி வர உடனே குணமாகும்.

கோடையினால் ஏற்படும் மிகப் பெரிய அபாயம் என்பது சன் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் .

நேரடியாய் சூரியனின் வெப்பம் மனித மூளையைத் தாக்கி அதன் மூலம் உயிர் இழக்கவும் நேரிடலாம். ஆனாலும் இது உடல் ஆரோக்கியத்தை சரிவர பாதுகாத்து உடலை சம நிலையில் வைத்துக் கொள்வோருக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வழக்கத்தை விட இரு மடங்கு தண்ணீர் உடலுக்குத் தேவைப்படும்.

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய பழங்களை அளவான முறையில் அனுதினமும் எடுத்துக் கொண்டால் உடல் வெம்மை காணாமல் போய் விடும்.

கோடைக்கே உரித்தான பருத்தி ஆடைகள் அணிவதன் மூலமும் அடிக்கடி குளிர்ந்த நீரில் உடலைத் தூய்மை செய்வதன் மூலமாகவும் வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இயற்கையின் மாற்றங்களையும் அற்புதங்களையும் அதன் போக்கிலேயே போய் நாம் ரசிக்கலாம்.