சண்டையை விலக்கச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

1053

திருச்சி……

குடி போதையில் இருந்தவர்களின் சண்டையை விலக்கி விட முயன்றவர் கடைசியில் உயிரை இழக்க நேர்ந்த பரிதாபம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இளங்கோ தெருவில் வசித்து வந்தவர் சின்னத்துரை (46).

இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள இவர், லண்டனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு திருச்சி கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் புதுமனை விழாவுக்காக சில நாட்களுக்கு முன் திருச்சி வந்திருந்தார்.

நவம்பர் மாதம் லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மது அருந்துவதற்காக சென்றிருந்தார்.

அங்கு ஏற்கனவே மது குடித்துக் கொண்டிருந்த முடுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மன், உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், திடீர் நகரைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்த சின்னதுரை அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மன், சரவணன் ஆகியோர் சின்னதுரையிடம் தகராறில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் சராமாரியாக கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னதுரையை அங்குள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சின்னதுரையின் மனைவி மதுமிதா அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார், தர்மனை கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர். லண்டன் குடியுரிமை பெற்றவர் டாஸமாக் பாரில் சண்டையை விலக்கச் சென்றபோது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.