சாலையில் கேட்ட இளம் காதல் ஜோடியின் அலறல் சத்தம் : பரபரப்பு சம்பவம்!!

294

கோவை…..

நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது.

அந்த காரில் இருந்து, அபயக்குரல் கேட்க ஆரம்பித்ததால், அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து இளம் காதல் ஜோடி ஒன்று வெளியே இறங்க முயற்சி செய்துள்ளது.

தொடர்ந்து, காரை சுற்றி மற்ற வாகன ஓட்டிகள் வந்து விட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய இளம் ஜோடி, வேகமாக சிறிது தூரம் ஓடியதாக கூறப்படுகிறது. மேலும், சிக்னல் அருகேயுள்ள ரோடில், ஓரமாக நின்ற படி, எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்றும் அவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.

இதனால், மற்ற வாகனங்களில் வந்த சிலரும், அந்த இளம் ஜோடி அருகே சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் நாங்கள் இணை பிரியாத காதலர்கள் என்றும், எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள் என்றும் இளம் காதல் ஜோடி தெரிவித்தது.

எங்களை மிரட்டுகிறார்கள், எங்களுக்கு உதவுங்கள் என்றும் அவர்கள் சாலையோரம் இருந்து கொண்டு கதறி அழுதனர். கொஞ்ச நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக மாற ஆரம்பித்த நிலையில், அருகே இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், அங்கு வரவே அவரின் காலில் விழுந்து காதல் ஜோடி எங்களை காப்பாற்றுங்கள் என கெஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்து. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த இளைஞர் கோவை மணியகாரம்பாளையம் பகுதியையும், இளம்பெண் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், அதனை மீறி திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி, பெண்ணின் தந்தை காரில் அழைத்து சென்றதாகவும், ஆனால் கார் சென்று கொண்டிருந்த போது, தங்களை தேனிக்கு கடத்திச் செல்ல முயன்றதாகவும் காதலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தங்களை பிரித்து ஏதாவது செய்து விடுவார்கள் என்பதால் சுதாரித்துக் கொண்ட ஜோடி, பயத்தில், சிக்னலில் கார் நின்ற போது, தப்பிக்க முயன்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையம் அழைத்து, சமரச பேச்சு வார்த்தை நடத்த போலீசார் முற்பட்டதாக கூறப்படுகிறது. வாகன நெரிசல் உள்ள பகுதியில், இளம் காதல் ஜோடிகள் காதலை சேர்த்து வைக்க வேண்டி, கதறி அழுத சம்பவம், பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.