தாயின் அஸ்தியுடன் விமானத்தில் திரும்பிய 10 மாத ஆண் குழந்தை..! ஏன் தெரியுமா?

495

பாரதி……………..

தாயார் இறந்ததை அறியாவயதில் தாயின் அஸ்தியுடன் தாயகம் திரும்பிய குழந்தை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன் இவரது மனைவி பாரதி இந்த தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட மூத்த மகனை கவனித்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்தது.

மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை செலவிட்ட நிலையில் மகன் உயிரிழந்ததால், ஒரு கட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வேலனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது மனைவி பாரதி கடந்த இரு ஆண்டுகள் துபாயில் பணிப்பெண்ணாக வேலைக்கு சென்றதால் ஓரளவு சிக்கலின்றி வாழ்க்கை ஒடியது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக பாரதி இந்தியா திரும்பினார். கடந்த மார்ச் மாதம் மீண்டும் தனது 7 மாத கைக்குழந்தையான தேவேசுடன் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்ற பாரதி அங்குள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்த போது எதிர்பாராவிதமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

இதையடுத்து அங்குள்ள ரஷீத் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாரதி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவரது குழந்தையை அவருடன் பணிபுரிந்த பெண்கள் பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் பாரதி கடந்த 29ஆம் தேதி பாரதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பணமில்லாத வேலவன் அங்கேயே இறுதி சடங்குகளை செய்து விடுமாறு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தார். அவரது அனுமதியின் பேரில் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது.

பெற்ற தாயை இழந்து தந்தையின் முகம் காணாது தவித்த கைக்குழந்தையின் நிலை கண்டு கண் கலங்கிய அவரது தோழிகள் இதுகுறித்து துபாய் நகர திமுக அமைப்பாளர் எஸ் எஸ் மீரான் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பிறகு அடுத்தடுத்த காரியங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு குழந்தை படும் துயர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூதரகத்துடனும் அங்குள்ள திமுக நிர்வாகிகளுடனும் பேசி அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் பின்னர் இறந்த தாய் பாரதியின் அஸ்தியுடன் 11 மாதக் குழந்தை தேவேசை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்து, தந்தை வேலவனிடம் ஒப்படைத்தார்.

தாயில்லாமல் தவித்த 11 மாத குழந்தையான தனது மகனை பத்திரமாக தமிழகம் அழைத்து வர உதவி புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட வேலவன், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் ஏற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக உதவி புரிவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தாயை இழந்து தவித்த குழந்தையை கண்ணை இமை காப்பது போல் தாயுள்ளத்தோடு காத்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சுமார் இரண்டு மாத காலம் வளர்த்தெடுத்த பாரதியின் தோழிகள் மனித நேயம் இன்னும் மரித்து விடவில்லை என்பதற்கு மற்றும் ஒரு சான்று..!