கோவை….
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ஜோதி லிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் மயங்கி இறந்து கிடந்துள்ளனர்.
இது குறித்து தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கையில், ஹாலில் இருந்த யூபிஎஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என இவ்வாறு கூறினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசிதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்தவிபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திற்னல் ஏற்பட்டு பலியாகியுள்ளது.
தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூபிஎஸ் உட்பட அனைத்து ஈய-அமில பேட்டரிகளும் சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்கும் என்கின்றனர் அறிவியல் அறிந்தவர்கள். பேட்டரிகள் மிக வேகமாக சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் உற்பத்தி விகிதம் அதிகரித்துவிடும்.
அப்போது, ஹைட்ரஜன் வாயுக்களின் செறிவு 4 சதவீதம் வெடிக்கும் வரம்பிற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அருகில் ஏதாவது தீ பற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால் பேட்டரிகள் வெடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும் என்கின்றனர். பேட்டரிகள் வெடித்த பின்னர் அதில் இருந்து கசியும் ஹைட்ரஜன் கேஸ் மூச்சு திணறலை ஏற்படுத்தி மரண அபாயமும் உள்ளது.
இதனால், பேட்டரிகளை அதி வேகமாகவோ ஹை ஓல்டேஜில் சார்ஜ் செய்வதையோ தவிர்க்கலாம் என்றும் தீ பற்றக்கூடிய இடத்திற்கு அருகாமையில் பேட்டரிகளை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.