திருமணமான 4 மாதத்தில் கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!

267

தூத்துக்குடி….

தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளிலிருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொன்ராஜ், தனது மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மாரியம்மாள், மருமகன் பொன்ராஜிக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், உங்கள் மகளுடன் வாழ பிடிக்கவில்லை என பொன்ராஜ் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் இருவருடன் மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மனைவியை சராமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் மாரிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாரிசெல்வியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த தாயார் மாரியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரிசெல்விக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் அவரது மரணம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தலைமறைவாக உள்ள பொன்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.