புதுமணத் தம்பதி…..
இந்தியாவில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத்தம்பதி செய்த செயல், சமூக வலைத்தளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் தடைபட்டு வருகிறது. விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என்று அனைத்தையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் அந்தப் பகுதியில் இருக்கும் கோவிட் நல மையத்திற்கு இலவசமாக 50 படுக்கைகள் வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்று வருகிறது.
மும்பையைச் சேர்ந்தவர் எரிக் லோபோ(28) இவர் மெர்லின் டஸ்கானோ(27) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரின் திருமணமும், வரும் குளிர் காலத்தில் 2,000 விருந்தினர்களை அழைத்து பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தம்பதி தற்போது இருக்கும் சூழலில், ஏதாவது ஒரு வகையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதன் படி இவர்களின் திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 22 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பின், இவர்கள் இருவரும் அருகில் இருக்கும் சட்பாலா கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தல் மையத்துக்கு சென்றனர்.
அங்கு, இலவசமாக 50 படுக்கைகள், தலையணை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்து எரிக் கூறுகையில், திருமணத்திற்கு நாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை நல்ல முறையில் செலவழிக்க விரும்பினோம்.
தற்போது கொரோனா தொற்றால் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் கொடுத்து உதவினோம் என்று தெரிவித்துள்ளார்.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் இருவரும் பரிசுகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மணப்பெண் தனக்கு என்று புதிய திருமண ஆடையும் வாங்கிக் கொள்ளவில்லை. திருமணத்தின்போது அணியும் ஆடையை வாடைகைக்கு எடுத்துக் கொண்டார்.
இதுமட்டுமல்ல திருமணத்திற்கு முன்பு இருந்தே சமையலறை அமைத்து தன்னார்வலர்களுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது, ரயிலில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல் என்று சேவை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த தம்பதி, தங்களின் தேனிலவை ஒத்தி வைத்துவிட்டு, இந்த சேவைகளை செய்ய இருப்பதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.