கோவை…
கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சரவணன்(19). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் சரவணன், அன்னூர் கோவை சாலையில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, கொலையாளிகள் இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சரணடைந்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலையாளிகளில் ஒருவர் அன்னூர் அடுத்த பிளைளையப்பம் பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் தமிழ்செல்வன்(20) என்பதும், அவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.
மற்றொருவர் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜராஜன் என்பதும் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் மூவரும் இந்து முன்னணியில் இருந்து வந்த நிலையில்,
சரவணன் அந்த அமைப்பில் இருந்து விலகி நிதி நிறுவனம் நடத்தியது தெரியவந்தது. அவர் கடந்த வாரம் திமுகவில் இணைந்த நிலையில், கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.