பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்!!

764

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் : ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம்.

‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை கேட்டு உருகாதோர் யாரும் இருக்க முடியாது.

கமலுக்கு முதல் பின்னணிக் குரல்:குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற இளம்பெண் என்பதை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கதாநாயகிகளுக்கும் காதல் பாட்டு:குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

வயதானாலும் மாறாத குரல்:அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

புகழ்பெற்ற பாடல்கள் சில…சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா(டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே( களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா( மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் பிரபலமானவை, இன்றும் ரசிக்கப்படுபவை.

வாழ்க்கைக்குறிப்பு:சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ’ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

ஏவிஎம் காரைக்குடியில் இருந்து சென்னை இடம் மாறிய போது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.