பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் மிருகம் – அடுத்தடுத்து 10 சம்பவங்கள்

721

தொடர் பாலியல் வன்கொடுமை – பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் மிருகம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுவனை கொலை செய்து தாய், தங்கையை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

சாதி வெறியர்களால் ஒரு குடும்பமே தாக்கப்பட்டதாக சமூக ஊடங்களில் வதந்தி பரப்பப்பட்ட நிலையில் உண்மை சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண், அவரது 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன் சமயன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சிறுவன் இறந்துவிட தாயும் மகளும் சிகிச்சைக்காக புதுசேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவத்தின் பின்னனியில் சாதிவெறியர்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் வட மாவட்டங்களில் திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் நேரடி தலைமையில் இந்த கொடூர கொலையாளியை பிடிக்க 60 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தடயங்கள் மூலம் கொலையாளி ஒருவர் என்பதையும், இதே பாணியில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. அந்த இரு குடும்பமும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த சம்பவத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்பதை விசாரணையின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தனர் காவல்துறையினர்..!

ஒரே மாதிரியான சம்பவங்கள் என்பதால் கொலையாளி தமிழகத்தில் வேறு எந்த பகுதிகளில் எல்லாம் இது போல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான் என்று விசாரணையில் இறங்கியது காவல்துறை. பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலையிலுள்ள கிராமங்களில் 5 சம்பவங்களும், கடலூரில் ஒரு சம்பவமும் நடந்துள்ளதும் குற்றவாளி சிக்காததும் தெரியவந்தது.

கடந்த காலங்களில் இது போன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது குறித்த பட்டியல் எடுக்கப்பட்டது. அப்போது புவனகிரியை சேர்ந்த தில்லை நாதன் என்பவர் இதே பாணியிலான கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவுகளின் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவரை நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். விசாரணையில் அவன் தான் இந்த தொடர் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது.

பெண்கள் மீது வெறி கொண்ட தில்லை நாதன் பல ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், பெண்களை தாக்கி அவர்கள் உயிருக்கு போராடும் தருணத்தில் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கொடூர எண்ணம் கொண்டவன் தில்லை நாதன் என்கின்றனர் காவல்துறையினர்.

பெண்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் நகைகளை அம்பிகா என்ற பெண் விற்று கொடுத்துள்ளார். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்தில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கொலையாளி தில்லை நாதனிடம் இருந்து கொலைக்கு பயன் படுத்திய இரண்டு இரும்பு ராடுகள், திருடப்பட்ட 11 செல்போன்கள், 6 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டது.

தனிமையில் வசிக்கின்ற பெண்கள் தகுந்த பாதுகாப்பின்றி கதவுகளை திறந்து வைத்துவிட்டு படுத்து உறங்கினால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!

அதே நேரத்தில் ஒரு சம்பவத்தின் உண்மை தன்மை அறியாமல் அதனை சாதிய ரீதியாக மட்டுமே அணுகி பதற்றத்தை பற்றவைப்பது கொலையை விட கொடூரமானது என்பதை சம்பந்தபட்டவர்கள் உணரவேண்டும்.