பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவுல இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

449

கொல்கத்தா…

அண்டை நாடான வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல். 22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.

நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவரால் இந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இதனால் இருவரும் கவலையில் இருந்துள்ளனர்.

காதலனை கரம்பிடிக்க முடியாமல் காத்திருந்த கிருஷ்ணா வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியாவிற்கு வர முடிவெடுத்திருக்கிறார்.

இதன்மூலம், சுந்தரவன காடுகள் வழியாக கங்கை நதியை கடந்து இந்தியாவிற்குள் வர திட்டமிட்ட கிருஷ்ணா துணிவுடன் தனது பயணத்தையும் துவங்கியுள்ளார். வங்க புலிகள் அதிகம் காணப்படும் சுந்தரவன காடுகளை கடந்து, சுமார் ஒருமணி நேரம் ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார் கிருஷ்ணா.

வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியா வந்த கிருஷ்ணாவை கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள காளிகாத் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார் ஆஷிக். ஆனாலும், அடுத்து வர இருக்கும் சிக்கல் குறித்து அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தற்போது கிருஷ்ணாவை கைது செய்திருக்கின்றனர். அவரை, வங்க தேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதனால், ஆஷிக் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

காதலனை கரம்பிடிக்க, வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு நீந்தியே வந்த இளம்பெண், திருமணம் நடைபெற்ற உடனேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

வங்க தேசத்திலிருந்து இதுபோன்று நீச்சலடித்து ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறையல்ல. இந்த வருட துவக்கத்தில் இளைஞர் ஒருவர் சாக்லேட் வாங்குவதற்காக இந்தியா – வங்க தேச எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடையையும் தாண்டி இந்தியாவிற்குள் வந்தார். காவல்துறையால் கைது செய்யப்பட அவருக்கு நீதிமன்றம் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.