போலி ஐ.டி. ரெய்டில் உண்மையான அதிகாரி .. மாஸ்டர் பிளானும் – மாட்டிய பின்னணியும்..!!

224

ராணிப்பேட்டை…

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் “தானா சேர்ந்த கூட்டம்” சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த உண்மையான வருமானவரித்துறை அதிகாரியும் சிக்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆட்டோ கண்ணன் என்பவரது வீட்டுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி வீட்டை சோதனையிட்டு 6 லட்ச ரூபாய் பணத்தை அபேஸ் செய்து சென்றது.

கண்ணன் அளித்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து முதலில் எழிலரசன் என்பவனை கைது செய்தனர். இந்த எழிலரசன், சுமார் 5 ஆண்டு காலம் கண்ணன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளான்.

பணத்தேவை ஏற்படும் காலங்களில் கண்ணனிடம் லட்சங்களில் பணம் கடனாகவும் வாங்கியுள்ளான். அதன் மூலம் கண்ணனிடம் அதிகமான பணப்புழக்கம் இருப்பதை உணர்ந்துகொண்ட எழிலரசன், அவரிடமிருந்து பணம் பறிக்கும் திட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் இணைந்து சென்னையில் உள்ள அவரது நண்பரான மது என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளான்.

இதனையடுத்து மது ஒரு குழுவினரையும் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் நரேன் என்பவன் ஒரு குழுவையும் ஒன்று கூட்டி மொத்தம் 6 பேர் ஆட்டோ கண்ணன் வீட்டுக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

திட்டப்படி, சோதனை நடைபெறுவதற்கு முந்தைய நாள், எழிலரசன் அந்த வீட்டை நோட்டமிட்டுள்ளான். அப்போதுதான் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவனுடைய உருவம் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து மோசடி கும்பல் தாங்கள் வந்த காரின் நம்பர் பிளேட்டை மாற்றி கண்ணன் வீட்டுக்கு வந்து பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், நரேன் அமைத்த குழுவில் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்ற உண்மையான அதிகாரியும் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல்தான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளதாகக் கூறப்படும் ராமகிருஷ்ணன், எழிலரசன் பேச்சைக் கேட்டு எப்படியும் பெரிய தொகை ஒன்று சிக்கும் என நினைத்து அவர்களோடு சென்றுள்ளார்.

வருமான வரி சோதனை எப்படி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த மாஸ்டர் பிளானும் அவரிடமிருந்தே சென்றுள்ளது.மோசடி கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நரேனையும் மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தனக்குப் பணம் கொடுத்து உதவிகள் செய்த வீட்டு உரிமையாளர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய எழிலரசனும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் அரசிடம் இருந்து கிடைக்கவிருந்த ஓய்வூதியப் பலன்களையும் மானத்தையும் இழக்கும் விதத்தில் கைதாகி சிறை சென்றுள்ள ராமகிருஷ்ணனும் பேராசை கொண்டால் பெருநட்டம்தான் என்பதை உணர்த்தியுள்ளனர்.