திருச்சி….
திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி, மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா(35) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன். இவர், ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்த போது, புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த சின்னராசுக்கும் இடையே ரகசிய சினேகிதம் ஏற்பட்டது. இந்த ரகசிய நட்பு, கள்ளக்காதலாக தொடர்ந்து வந்த நிலையில், இதையறிந்த புல்லட் ராஜா, சின்னராசு மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு சின்னராசு தனது ஆட்டோவில் கிருஷ்ண வேணியை அழைத்துக் கொண்டு சமயபுரம் சென்றார். இதனையறிந்த ராஜா அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
சமயபுரம் முடி காணிக்கை மண்டபம் அருகே நடந்து சென்ற சின்னராசுவை மறித்த ராஜா கத்தியால் அவரை சரமாரியாக சதக் சதக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னராசு அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையான சின்னராசுவின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு வைத்தனர். சமயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ராஜா என்கிற புல்லட் ராஜாவை சுற்றி வளைத்து, இன்று கைது செய்தனர்.
போலீசாரிடம் புல்லட் ராஜா அளித்த வாக்குமூலத்தில், நான் ஜெயிலில் இருக்கும் போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த பின் இருவரையும் கண்டித்து பார்த்தேன். கோவில் அருகாமையில் வைத்தும் கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.