மனைவியை 2 நாட்களுக்கு உல்லாசத்துக்கு அனுப்ப சொன்னதால் கொன்றேன் : பகீர் வாக்குமூலம்!!

616

கோவை…

அன்னூர் அருகே மனைவியை உல்லாசத்திற்கு அனுப்பிவை என்றதால் தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொன்றேன் என கைதான அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்ட கவுண்டன் புதூரை சேர்ந்தவர் நடராஜ் (56). ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் நடராஜ் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது உடலின் அருகே காலி மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கிடந்தது. இதனால் குடிபோதையில் யாராவது அடித்து கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் நடராஜ், பக்கத்து வீட்டை சேர்ந்த குருசாமி என்பவருடன் சேர்ந்து மதுகுடிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

அப்போது வடுகபாளையம் பகுதியில் நின்றிருந்த குருசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது கண்ணில் காயம் இருந்ததை கண்ட போலீசார் எப்படி இது ஏற்பட்டது என்று விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் குருசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில்:- நான் உயிரிழந்த நடராஜின் வீடு அருகே வசித்து வருகிறேன். நானும், அவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். பொங்கல் அன்று வெளியில் சென்று மது குடிக்க முடிவு செய்த நான், நண்பர் நடராஜையும் அழைத்தேன்.

பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்களுடன் பச்சாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றோம். அங்கு மது பாட்டில்கள் வாங்கி கொண்டு சென்னியப்ப கவுண்டன் பகுதியில் உள்ள காட்டுபகுதிக்கு சென்றோம்.

அங்கு அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினோம். சிறிது நேரம் கழித்து எங்களுடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நானும், நடராஜூம் மட்டும் இருந்து தொடர்ந்து மது அருந்தினோம். அப்போது நடராஜ், என்னிடம் உனது மனைவியின் நடத்தை சரி கிடையாது.

அவளை என்னுடன் 2 நாட்கள் அனுப்பிவை. அவளுடன் 2 நாட்கள் இருந்து விட்டு பின்னர் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்தார். இதை கேட்டதும் எனக்கு கடும் கோபம் வந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டோம்.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த கல்லை எடுத்து நடராஜின் தலையில் போட்டேன். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து நான் எதுவும் நடக்காதது போல், மீண்டும் சென்று மதுகுடித்து விட்டு இந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர் என்றார். இதனையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.