மரணப் படுக்கையில் இருந்த தாய்க்கு போனில் பாட்டு பாடிய மகன் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

380

தாய்……….

வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்த தன் தாய்க்கு, வீடியோ கால் மூலமாக ஒரு பாடலை பாடி காண்போரை நெகிழ வைத்துள்ளார் மகன்.

இதை, அந்த அம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர், ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் நெஞ்சை கணக்கவைக்கும் பதிவாக அமைந்துள்ளது.

டாக்டர் தீபிகா கோஷ், மே 12-ஆம் தேதி பணி முடிந்த பிறகு ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவில், மொத்தம் 3 குறும்பதிவுகள் உள்ளன. ஆனால், இவற்றை படித்து முடிக்கும்போது நம் நெஞ்சை உலுக்கிவிடுகின்றன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் நிலை குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிப்பதாக முதல் குறும்பதிவு அமைந்துள்ளது. அந்த நோயாளி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை தெரிவிக்கும் வகையிலான இந்தக் குறும்பதிவில், “இன்று, எனது ஷிப்டின் முடிவில், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நோயாளி ஒருவரின் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசினேன்.

பொதுவாக, அவர்கள் விரும்பினால் எங்கள் மருத்துவமனையில் இவ்வாறு செய்வது வழக்கம். நோயாளியின் மகன் என்னிடம், என் நேரத்தை கொஞ்சம் கேட்டார். அதன் பிறகு அவர் இறந்து கொண்டிருக்கும் அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்.” அதையடுத்து அவரது இரண்டாவது ட்விட்டர் குறும்பதிவில்;
“அவர் ‘தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்’ எனும் பாடலை பாடினார். அவர் தன் அம்மாவை பார்த்தபடி பாடுவதை பார்த்துக்கொண்டே நான் போனை வைத்துக்கொண்டிருந்தேன்.

செவிலியர்கள் இடையே வந்து அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர் இடையே உடைந்து அழுதாலும், பாடி முடித்தார். பின்னர் அம்மாவின் நிலையை கேட்டுவிட்டு, எனக்கு நன்றி கூறி போனை வைத்துவிட்டார்.”

கடைசியாக அவரது மூன்றாவது குறும்பதிவில், “நானும் செவிலியர்களும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். நாங்கள் தலையை அசைத்துக்கொண்டோம், கண்கள் ஈரமாக இருந்தன. செவிலியர்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை கவனிக்க அல்லது அவர்கள் வெண்டிலேட்டர் சாதனத்தின் கூக்குரலுக்கு பதில் சொல்ல சென்றனர். இந்த பாடல் எங்களுக்கு மாறிவிட்டது. குறைந்தபட்சம் எனக்கேனும் மாறிவிட்டது. இனி இது அவர்களுடைய பாடலாக இருக்கும்.”

கொரோனா நோயாளிகள் பலருக்கு குடும்பத்தினர் கடைசியாக விடை கொடுக்க கூட வழியில்லாத எண்ணற்ற கண்ணீர்க் கதைகளை மருத்துவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய கண்ணீர்க் கதைகளின் வரிசையில் இடம்பெறும் டாக்டர் தீப்ஷிகாவின் இந்த பகிர்வு, ஒரு நோயாளியின் கடைசி தருணத்தில் வீடியோ வழியே பாட்டுபாடி விடை கொடுத்த ஒரு பாசமிகு மகனுக்கு, அந்த வாய்ப்பை டாக்டர் உருவாக்கி தந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை விவரிக்கிறது.

சாகும் நொடிகளில் இருந்த தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டத்தை விவரிக்கும் இந்தப் பதிவுக்கு ட்விட்டர் பயனாளிகள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ள பதில் கருத்துகளும் படிப்பவரை நெகிழவைக்கின்றன.