மருந்தகங்களில் மட்டும் கொ.ள்ளையடிப்பதை கொ.ள்கையாக கொண்ட ‘மருந்தக கொ.ள்ளையன்’ : பகீர் பிண்ணனி…!!

290

சாகுல்அமீது…

மருந்தங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்ட தனி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பெரியகுளம் அருகே நேற்று முன்தினம் நகரின் பிரபலமான தனியார் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பிரபலமான தனியார் மருந்தகத்தில் கடந்த 2நாட்களுக்கு முன்பு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தேறியது.

நகரின் மையப்பகுதியில் செயல்படும் அந்த மருந்துக் கடையின் கல்லாவில் இருந்த பணம் ரூ.1,70,000 மற்றும் சாமி படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.10,000 என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 80ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து மருந்தக உரிமையாளர் லட்சுமனாகுப்தா என்ற மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தென்கரை காவல்துறையினர் விசாரணையைத் துவக்கினர்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அட்டங்குளக்கராவைச் சேர்ந்த சாகுல்அமீது என்ற நபரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூபாய் 1,09,000 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சாகுல்அமீது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

பகீர் தகவல்கள்:

இது தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. அதில் கொள்ளையடிக்கப்பட்;ட மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று தலையில் தொப்பி அணிந்திருந்த நபர் ஒருவர், தனி ஆளாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து அதனை பையில் வைத்துக் கொண்டு சென்றிருப்பதை முக்கிய ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தமிழகத்தில் வேறு பகுதிகளில் இது போன்று மருந்தகங்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களோடு ஒப்பிட்டதில், கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இதே போல தொப்பி அணிந்திருந்த நபர் ஒருவர் தனி ஆளாக கொள்ளையடித்த பணத்தை பையில் எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

அந்த வழக்கில் தொடர்புடைய சாகுல்அமீது தான், பெரியகுளம் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு காவல்துறையினரின் உதவியோடு சாகுல்அமீதுவின் விபரங்கள் பெறப்பட்டு கேரளாவில் அவரது இருப்பிடத்திலேயே கைது செய்யப்பட்;டார் மருந்தக கொள்ளையர் சாகுல்அமீது.

ஆம், மருந்தகங்களை மட்டும் திட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் தான் இந்த சாகுல்அமீது. கேரளாவில் தனது உறவினரின் மருந்தகத்தில் வேலை செய்து வந்த அவர், மற்ற கடைகளைப் போல் அல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் மட்டும் உரிமையாளர்கள் பணத்தை அங்கேயே வைத்து சென்று வருவதை நன்கு அறிந்ததாகவும், அதனால் மருந்தகங்களில் கொள்ளையடிப்பதை குறிக்கோளாக கொண்டிருப்பதாகவும் விசாரணையில் சாகுல்அமீது தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு ஊருக்கு வரும் சாகுல் அமீது அங்கேயே தங்கி, துணி விற்கும் தலை சுமை வியாபாரி போல வலம் வந்து அப்பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் வருகையுடன் பிரபலமாக செயல்படும் மருந்துக் கடைகளை நன்கு நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்கு ஆயத்தமாகிவிடுவார்.

அதனைத் தொடர்ந்து யாருடைய உதவியும் இன்றி இரும்புக்கம்பியால் அடைத்திருக்கும் கடையின் பூட்டை உடைத்து தனது கைவரிசையை காட்டி கொள்ளையடிப்பார். இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது சிசிடிவி கேமிரா பதிவுகள் இருப்பது குறித்து எந்தவித சலனமும் இன்றி நிதானமாக கொள்ளையடித்து வந்துள்ளார்.

பொதுவாக பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்கள், காவல்துறையினர் தங்களை அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக இருப்பிடம் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை மாற்றிவிடுவது வழக்கம். ஆனால் சாகுல்அமீதோ இது போன்று எதையும் மாற்றாமல் எப்போதும் போல வாழ்ந்து வந்துள்ளார்.

துப்பறிந்து தன்னை பிடிப்பதற்கு காவல்துறையினர் வந்தால், கொள்ளையடித்த பணத்தில் செலவு செய்தது போக மீதமிருக்கும் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடுவதாகவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. மருந்தகங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்டுள்ள நபரால் மருந்தக உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.