மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார்: கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!

716

தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்த நிலையில் பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 14-ஆம் திகதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஹரிதா அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளரான பிரேமாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க மறுத்ததோடு, விடுதியை பூட்டியுள்ளார்.இதனால் விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி துறை தலைவர் வேலாயுதம் தனது அறைக்கு அழைத்து அறையினை பூட்டி ஆபாசமாக தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுகட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மாணவி கூறியுள்ளார்.

இதன் காரணமாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார்.

அதன் பின் வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தனக்கு நடந்த அவமானங்களை மிகவும் கண்ணீரோடு கூறியுள்ளார்.