மூன்று வயது குழந்தைக்கு கிடைத்த மறுவாழ்வு : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

340

மூன்று வயது குழந்தை….

ஊரடங்கால் பெற்றோர் வேறு மாநிலத்தில் சிக்கிய நிலையில், கேரளாவில் 3 வயதுக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சையை அரசு வெற்றிகரமாகச் செய்ய வைத்துள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த பிரின்ஸ் மற்றும் ஆவனி தம்பதியினருக்கு 2 மகள்கள். குறித்த தம்பதி 9 வருடங்களாக உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வருகின்றனர். பிரின்ஸ் ரயில்வே ஊழியராகவும், ஆவனி செவிலியராகவும் உள்ளார்.

இவர்களின் இளைய மகளுக்குப் பிறக்கும்போதே இதயத்தில் கோளாறு இருந்ததால், ஒரு வயது இருக்கும் போது கேரளாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அந்தக் குழந்தைக்கு 3 வயதாகிறது. இந்த நிலையில் அந்தக் குழந்தைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்காகக் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அமுல்படுத்தும் முன்பு தனது இரண்டு மகள்களுடன் அந்தத் தம்பதியினர் கேரளா வந்தனர்.

பின்னர் ஆவனியின் தாயிடம் குழந்தைகள் இருவரையும் விட்டுவிட்டு உத்தரப்பிரதேசம் திரும்பினர். உத்தரப்பிரதேசத்தில் தனது பணியை ராஜினாமா செய்ய ஆவனியும், பணியிடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ள பிரின்ஸும் சென்றிருந்தனர்.

ஆனால் அதற்குள் பொது முடக்கம் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் இருவரும் கேரளா திரும்பமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையே குழந்தைக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை தரப்பிலிருந்து கட்டாயப்படுத்தியுள்ளனர். குழந்தைகளுடன் தனியாக எப்படி அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது எனப் பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை தொடர்புகொண்டு பேசிய ஆவனி தனது நிலைமையை தெரிவித்துள்ளார்.
அவரிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஷைலஜா, உடனே உதவிகளைச் செய்தார்.

அதன்படி, கடந்த மே 15ஆம் திகதி இருவரும் கேரளா திரும்பினர். அதற்குள் குழந்தையின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்திலிருந்து திரும்பிய தம்பதியினர் 14 நாட்கள் அரசு சார்பில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் மே 29ஆம் திகதி தனிமைக் காலம் முடிந்து திரும்பினர். அதற்குள் குழந்தைக்கு மே 22 மற்றும் 25ஆம் திகதிகளில் இரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

இதனால் குழந்தையுடன் பெற்றோரும் வீடு திரும்பினர். கேரள அரசின் உதவியால் தற்போது அந்தக் குழந்தை பூரண நலத்துடன் இருப்பதாக பிரின்ஸ் தம்பதி தெரிவித்துள்ளனர்.