ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொள்ளையனின் புகைப்படம்!!

293

குஜராத்….

ஓடும் ரயிலின் கழிவறையின் மேல் பகுதியை துளையிட்டு, சரக்கு பெட்டியில் இருந்த புடவை பண்டல்களை அள்ளி சென்ற வடமாநில நபர், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நவஜீவன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்தது. அதே ரயிலின் சரக்கு பெட்டியில், 60 பண்டல்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகள் பார்சலில் வந்தன.

சென்னை வந்த அந்த ரயிலின் சரக்குப் பெட்டியின் கதவை திறக்க நீண்ட நேரம் முயற்சி செய்தும் முடியாமல் போகவே, தாழிடப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து, கதவை திறந்து பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளே இருந்த பார்சல் பண்டல்கள் கலைந்து போன நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள்.

மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், ரயில் சரக்கு பெட்டியின் மேல் பகுதியானது ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு வெட்டப்பட்டு இருந்தது. அந்தத் துளைக்குள் சென்று பார்த்தபோது, அது அருகில் இருந்த கழிவறையின் மேல் பகுதியில் முடிவடைந்தது.

கழிவறைக்குள் சென்று அதன் மேல் பகுதியைத் துளையிட்டு அதன் வழியாக சரக்குப் பெட்டிக்குள் நுழைந்த கொள்ளையன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 புடவை பண்டல்களை கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில் எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நாக்பூர் – வார்தா ரயில் நிலைய சந்திப்புக்கு இடையே, இதே போன்று கொள்ளை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுறுசுறுப்பான சென்னை ஆர்பிஎஃப் போலீசார், கொள்ளை போன ரயில் பெட்டியை ஒட்டி பயணம் செய்த பயணிகளின் செல்போன் எண்கள் மற்றும் பழைய வழக்கில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்ணின் டவர் லொக்கேஷனை சரிபார்த்த போது, பழைய வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த ரயிலில் பயணம் செய்தது உறுதியானது.

இந்த நிலையில்தான் கொரோனா பரவல் ஆர்பிஎஃப் போலீசாரின் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. ஒரு வழியாக பெருந்தொற்று குறைந்த நிலையில் சென்னை ஆர்பிஎஃப் போலீசார் கடந்த வாரம் நாக்பூர் சென்று மொமின்புரா என்ற பகுதியை சேர்ந்த முகம்மது ஜெசிம் என்ற புடவை கொள்ளையனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் கழிவறையில் இருந்து புடவை பண்டல் இருந்த பெட்டிக்கு துளையிட்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான் முகமது ஜெசிம். வழக்கமான நடைமுறைக்குப் பின்னர், அவனை சென்னைக்கு அழைக்கு வந்தனர். பின்னர் அவனை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.