விடிந்தால் Interview: இரவு நேர குதூகலத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்!!

241

சென்னை…

சென்னை பெருங்களத்தூர் அருகே அரங்கேறிய கோர விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.

பின்னர் நண்பர்களுடன் சென்னை தி. நகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு காரைப்பேட்டை பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தனர்.

அப்போது குதூகலமாக வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வரலாம் என அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரி அடியில் சிக்கிய கார் சுக்குநூறாக நொறிங்கி தரைமட்டமானது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான 5 பேரின் உடல்களையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் பாகங்களாக மீட்டனர்.

பின்னர் அந்த உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 5 பேரும் நாளை நடைபெறவிருந்த ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்கயிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.