விதவை பெண்ணுடன் உல்லாசம் : கருக்கலைப்பு செய்த காவலருக்கு நேர்ந்த பரிதாபம்!!

416

செங்கல்பட்டு….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபனா (27). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஷோபனா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது சொந்த ஊர் வந்தவாசி. எனக்கும் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 8.12.2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்.

பின்னர் நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு தெரிந்தது. குழந்தைப் பிறந்த பிறகு வினோத்குமார் வீட்டுக்கு தகவல் தெரியவந்தது. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்காததால் என்னுடன் வாழ வினோத்குமார் மறுத்தார்.

அதுதொடர்பாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த வினோத்குமார், வீட்டுக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஒருநாள் பைக்கில் சென்ற போது விபத்தில் வினோத்குமார் இறந்து விட்டார்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு விக்னேஷ்வர் என்பவர் முகநூல் மூலம் எனக்கு அறிமுகமானார். அவர் புழல் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். 2021-ம் ஆண்டு காவலர் விக்னேஷ்வர் என்னை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்.

எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் விக்னேஷ்வர் மீது புகார் அளித்தேன். போலீஸார் எங்களை சேர்ந்து வாழச் சொல்லி அறிவுரை வழங்கினர்.

இந்தச் சமயத்தில் நான் கர்ப்பம் அடைந்தேன். கருவைக் கலைக்கும்படி விக்னேஷ்வர் கூறினார். நானும் மாத்திரைகளைச் சாப்பிட்டு கருவைக் கலைத்தேன். அதன்பிறகு என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார்.

எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்அடிப்படையில் போலீஸார் புழல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் விக்னேஷ்வர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷோபனா கூறுகையில், “காவலர் விக்னேஷ்வர், என்னை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அவர் எனக்கு வீட்டிலேயே தாலிக்கட்டி குடும்பம் நடத்தினார். வீட்டுக்கு வந்தால் போனிலேயே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். அவர் 4 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வந்தார். என்னை ஏமாற்றியதால் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தேன்.

அவர் மீது தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரைக் கைது செய்யவில்லை. விக்னேஷ்வர் என்னுடன் பழகியதற்கான அனைத்து ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன். எனக்கு நீதிகிடைக்கும் வரை போராடுவேன்” என்றார்.

காவலர் விக்னேஷ்வரிடம் இதுகுறித்து கேட்டபோது, “ஷோபனா என்பவர் கொடுத்த புகாரில் உண்மையில்லை. என் மீது வழக்கு பதிவு செய்ததால் என்னை சஸ்பெண்ட் செய்து விட்டனர்” என்றார்.

இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “காவலர் விக்னேஷ்வர், முன்ஜாமீன் பெற்றுவிட்டதால் அவரை கைது செய்யவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

புகாரளித்த ஷோபனா அளித்திருக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர். காவலர் விக்னேஷ்வர் பணியாற்றும் புழல் காவல் நிலையத்தில் விசாரித்தோம். “கடந்த 2017-ம் ஆண்டு காவலராக விக்னேஷ்வர் பணிக்குச் சேர்ந்தார்.

காவல் பணியைச் சரியாக செய்தார். அவர் ஷோபனா என்ற பெண்ணுடன் பழகி ஏமாற்றியதாக தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்ததும், காவலர் விக்னேஷ்வரிடம் விசாரணை நடத்தி உயரதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். காவலர் விக்னேஷ்வர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றனர்.