விலக நினைத்த பெண்: விரட்டி, விரட்டி மிரட்டிய ஆசாமி… பெண் எடுத்த முடிவால் காத்திருந்த அதிர்ச்சி!!

215

அறிவுடைநம்பி….

தஞ்சையில் தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதலங்களில் வெளியிட்டதோடு, அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் விசிக முன்னாள் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். “சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது” என போலீசுக்கு சவால் விட்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்தவனை சென்னையில் வைத்து போலீசார் மடக்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவியும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுடைநம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளனர். கணவரை பிரிந்த ராகவியும் மனைவியைப் பிரிந்த அறிவுடை நம்பியும் கட்சிக் கூட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகையில் பழக்கமாகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று மே மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்ததால், இருவரும் பல்வேறு இடங்களுக்குச் செல்வதும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், திருமணத்துக்கு சில வாரங்களுக்கு முன்பு ராகவிக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அறிவுடைநம்பி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான் என்றும் தஞ்சையில் தனியாக வீடு எடுத்து அந்தப் பெண்ணோடு குடும்பமும் நடத்தி வருகிறான் என்றும் ராகவிக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிவுடைநம்பியிடம் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்று மழுப்பியதாகக் கூறுகிறார் ராகவி.

இருப்பினும் அவனை நம்பாத ராகவி, தஞ்சைக்கு நேரடியாகச் சென்று விசாரித்தபோது, அறிவுடைநம்பி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ராகவி உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி ராகவியோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் போலீசில் புகாரளிக்கச் சென்ற ராகவியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ராகவி, பலமுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி, அறிவுடைநம்பி மீது புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து ராகவியை போனில் அழைத்து, ஆபாசமாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளான் அறிவுடைநம்பி. முகநூலிலும் அறிவுடைநம்பி தன்னைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டு வந்ததாகக் கூறுகிறார் ராகவி.

போலீசுக்குப் பயந்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அறிவுடைநம்பி, ராகவியை வெறுப்பேற்றுவதாகவும் போலீசுக்கு சவால் விடுவதாகவும் நினைத்து, “ சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது”, “எல்லாமே டிரெய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு, ஐயாம் வெயிட்டிங்” என சினிமா டயலாக்குகளை எல்லாம் முகநூலில் பதிவேற்றி வந்துள்ளான். இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய தஞ்சை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த அறிவுடைநம்பியை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரங்கள் விடுதலை சிறுத்தை கட்சித் தலைமைக்குத் தெரியவந்து, அறிவுடைநம்பி கட்சியிலிருந்து 3 மாத காலத்துக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளான்.