அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை , மகள் : கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!!

296

திருவண்ணாமலை….

திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன் (வயது 49). இவரது மனைவி ரம்பா (வயது 43). இந்த தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் சரண்செல்வா என்ற மகனும் உள்ளனர். சிவபாலன் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு, மகள் தேவிப்பிரியா வீட்டில் வாயில் நுறைதள்ளியபடி சோபாவில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ரம்பா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தேவிபிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து தேவிப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். மகள் இறந்த வீடே அதிர்ச்சியில் இருந்த நிலையில், தந்தை சிவபாலன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று மதியம் மணலூர்பேட்டை சாலை, கண்ணமடை அருகே உள்ள காப்புக்காட்டில் தந்தை சிவபாலன் இரண்டு கை மணிக்கட்டு மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி ரம்பா, காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் சிவபாலன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் மற்றும் தந்தை மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.