ஹெட்போனுக்காக நடந்த பிரச்சினையில் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

1201

கோயம்புத்தூரில்….

கோயம்புத்தூரில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து ஒன்று சிவகாசியை நோக்கி சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. சுமார் 40 பயணிகளை ஏற்றி செல்லும் இந்த பேருந்தில் கார்த்திக், ரமேஷ், சேதுராமன் ஆகிய மூவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து பயணித்து வந்தனர்.

ரமேஷ், சேதுராமன் இருவரும் மதுரைக்கு செல்வதாக இருந்தனர். கார்த்திக் திருப்பூர் பல்லடத்தில் இறங்குவதாகவும் இருந்தது. தனியாக வந்த கார்த்திக் பொழுது போகவில்லை என்பதற்காக ஹெட்போன் போட்டுக் கொண்டு பாடல்களைக் கேட்டு வந்துள்ளார்.

சுமார் 2500 ரூபாய் மதிப்புள்ள அந்த ஹெட்போனைப் பார்த்த ரமேசுக்கு அதன் மீது ஆசை பிறந்தது. உடனே அந்த ஹெட்போனை பறித்துக் கொண்டு தனது செல்போனுடன் இணைத்து பாடல்களைக் கேட்கத் தொடங்கினார் ரமேஷ். இதைப் பார்த்த கார்த்திக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனது ஹெட்போனை திருப்பிக் கொடுத்து விடு என ரமேஷிடம் சண்டைக்கு போகவே, ரமேசும், சேதுராமனும் இணைந்து திருப்பித் தாக்கத் தொடங்கினர்.

சுற்றியிருந்த பிற பயணிகள் இந்த சண்டையைப் பார்த்தபோதும், மூன்று பேருமே நண்பர்கள் என நினைத்து முதலில் தலையிடாமல் இருந்தனர். அதைத் தொடர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கி பேருந்தில் உள்ள கம்பியில் தள்ளியதையடுத்து நடத்துநர், பயணிகள் என அனைவருமே தட்டிக் கேட்டனர்.

ஆனால் அதற்குள்ளாகவே கார்த்திக்கின் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வரத் தொடங்கியது. உடனே பயணிகள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த கார்த்திக்கை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய ரமேஷ் மற்றும் சேதுராமன் ஆகியோரை கைது செய்தனர். ஒரு ஹெட்போனுக்காக நடந்த பிரச்சினையில் இளைஞரின் மண்டை உடைந்த சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.