அடுப்பு பற்ற வைக்க சானிட்டைசர்: கூட்டாஞ்சோறு சமைத்த சிறுவன் : அடுத்த நொடியில் நடந்த விபரீதம்.!!

613

ஸ்ரீராம்….

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட EB ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகனின் மூன்றாவது மகன் ஸ்ரீராம், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பேரிடர் காரணமாக வீட்டில் இருந்தே பயின்று வந்த நிலையில், ஸ்ரீராமும் நண்பர்களும் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்க முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர். ஸ்ரீராமின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தூக்கத்தில் இருந்துள்ளார்.

அந்த நேரம் வீட்டுக்கு வெளியே வெந்நீர் வைக்கும் விறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்த அரிசி, பருப்பு மற்றும் காய்கறியை போட்டு தண்ணீரை ஊற்றி வேகவைப்பதற்காக விறகு அடுப்பை மூட்ட, ஸ்ரீராம் முயற்சித்துள்ளான்.

வழக்கமாக மண்ணெண்ணெய் ஊற்றி விறகை பற்ற வைப்பதை பார்த்துள்ள சிறுவன், நீலநிறத்தில் இருந்த சானிட்டைசரை ஊற்றி பற்ற வைத்துள்ளான்.

அப்போது குப்பென்று பற்றிய தீ எதிர்பாராதவிதமாக தீ ஸ்ரீ ராம் மீது பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஸ்ரீராம் மற்றும் அவனது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.

மிகக்கடுமையாக முகம் கருகி, உடலெல்லாம் தீக்காயமடைந்த ஸ்ரீராம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவர், சிறுமிகள் வீடுகளில் இருந்தே பயின்று வரும் நிலையில், விளையாட்டில் அதிக கவனம் செல்வதற்கு வாய்ப்புள்ளது.

எனவே பெற்றோர்கள் கண்காணிப்பும், சானிட்டைசர் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியம் என்பதே, சிறுவன் ஸ்ரீராமின் உயிரிழப்பு நமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.