திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு சென்மார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான மணி . விவசாயியான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 35 வயதான மகன் வனராஜாவுக்கு மட்டும் திருமணம் ஆக வில்லை. இவர் விராலிமாயன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை தொட்டி குடிநீர் ஆபரேட்டராக இருந்து வருகிறார்.
இவரது தங்கை நித்யா அதே பகுதியில் தனது 3 குழந்தைகளுடன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நித்யாவின் கணவர் ராஜேஷ் உசிலம்பட்டியில் கறிக்கடை வைத்துள்ளார். வனராஜா தனது தந்தைக்கு சொந்தமான 34 செண்ட் நிலத்தை வைத்து பராமரித்து வந்துள்ளார். அந்த நிலத்தில் தனக்கு பங்கு வேண்டும் என நித்யா கேட்டுள்ளார்.
ஆனால் தான் அந்த இடத்தில் பால்பண்ணை வைக்கப்போவதாகவும் அதனால் இடத்தை தர முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் குடிபோதையில் அடிக்கடி தனது தங்கை நித்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று நித்யா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் அவரையும் அரிவாளால் வெட்ட முயன்றார். இது குறித்து தனது கணவரிடம் நித்யா கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் நள்ளிரவில் வனராஜா வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டு இருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வனராஜா தப்பி ஓட முயன்ற போது அவர் மீது நித்யா பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். இதில் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டதோடு வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தது. பலத்த காயங்களுடன் வனராஜா வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நித்யா மற்றும் ராஜேசை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.