நீலகிரி…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார்.
இந்நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா நீட் தேர்வில் 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஜெயாவை அவரது பெற்றோர் திருப்பூரில் இருக்கும் அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதாக அக்காவிடம் கூறிவிட்டு வந்த ஜெயா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஜெயாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
அதில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
எனது முடிவு உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
எனவே அம்மா என்னை மீண்டும் மன்னித்துவிடு என ஜெயா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.