கேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல ஆணாக பிறந்த சூர்யா தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர்.
பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் என்றால் இந்த சமூகம் ஒதுக்கும். குடும்பங்களும் அவர்களை ஏற்க முன்வராது. பொது இடங்களில் கழிவறை வசதி கிடையாது என ஏகப்பட்ட பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் தங்களுக்கு இருந்த தடைக் கற்களை உடைத்து அவர்களை காதல் இணைத்துள்ளது.
இவர்களின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இஷானும், சூர்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் நாளடைவில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இஷானுக்கு சூர்யா மீது காதல் ஏற்பட அதனை எப்படி வெளிப்படுத்துவது என தயங்கியிருக்கிறார். சூர்யா தனது மனைவியாக வந்தால் வாழ்வும் சிறக்குமே என நினைத்த இஷான், தனது காதலை ஒருவழியாக சூர்யாவிடம் வெளிப்படுத்திவிட்டார்.
எப்போது காதலை அவர் சொல்வார் என காத்திருந்த சூர்யாவுக்கும், இஷான் காதலை வெளிப்படுத்திய அந்த நிமிடம் ஆயிரம் வாட்ஸ் பல்ப். உடனே ஒகே சொல்லிவிட்டார். தற்போது காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணம் ஆகும்.
இதுகுறித்து இஷானும் சூர்யாவும் பேசும்போது, “ எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை. ஊரறிய கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது” என மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் அந்த தம்பதியினர்.