வம்பு பேசுவதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் அல்லர் என இஸ்ரேலிய ஏரியல் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்று கூறுகின்றது.
‘ஜென்டர் ஸ்ரடீஸ்’ ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி ஆய்வு தொடர்பான தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது 2200 க்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டவர்களிடம் எவராவது ஒருவர் குறித்து தமது நண்பரிடம் எவ்வாறு விமர்சிப்பீர்கள் என வினவப்பட்ட போது அவர்கள் ஒவ்வொருவரும் அளித்த பதில் ஆய்வாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக இவ் ஆய்வில் பங்கேற்ற ஆய்வாளரான பென் ஹாடர் தெரிவித்தார்.
இவ் ஆய்வின் பெறுபேறுகள் பெண்களே வம்பளப்பதில் விண்ணர்கள் என்ற பொதுவான கண்ணோட்டத்தை மாற்றுவதாக அமைந்திருந்தமை தம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளதாக தெரிவித்த பென் ஹார்டர், தமது ஆய்வு ஆண்கள் பெண்களை போன்று வம்பு பேசும் பழக்கத்தை கொண்டுள்ளவர்கள் என்பதை மட் டுமல்லாது ஆண்கள் நுட்பமான உணர்வுள்ளவர்கள் என்பதையும் காண்பிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.