இந்தியாவில் மாற்றாந்தாயை சொத்து பிரச்சனையில் கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்தவர் அபுல் அலிம். இவர் முதல் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் அப்துல் ஹாசன் மற்றும் வாசிம் கல்லு என இரு மகன்கள் அவருக்கு உள்ளனர்.
பின்னர் அலிம் இரண்டாவதாக சுலீமா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர் மூலம் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்து வந்த வீட்டை சுலீமா சமீபத்தில் தனக்கு பிறந்த பிள்ளைகள் மீது கணவர் அனுமதியுடன் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக அப்துலின் மனைவி ஷபனா, சுலீமாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஷபனாவின் கணவர் அப்துல் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்த போது அவரிடமும் சுலீமா சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தனது மாற்றாந்தாயான சுலீமாவை குத்தி கொலை செய்துள்ளார். சுலீமாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள்.
ஆனால் எந்த வித பதற்றமும் இல்லாமல் இருந்த அப்துல் பொலிசாரை அழைக்குமாறு அவர்களிடம் கூற பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அப்துலை கைது செய்துவிட்டு, சுலீமாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து நடந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் அப்துல் வாக்குமூலமாக அளித்துள்ளார்.