இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டுகள்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!!

526

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக, பெர்லின் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 1944ஆம் ஆண்டு, ஜேர்மனி – பிரித்தானியா இடையே நடந்த இரண்டாம் உலகப் போரின் போது, பெர்லின் நகரில் உள்ள பல பகுதிகளின் மீது பிரித்தானிய நாட்டு விமானப்படைகள் மிகப்பெரிய வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலினால் பல நகரங்கள் இடிந்து தரைமட்டமாகின. தற்போது, அந்த நகரங்கள் எல்லாம் சீராக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன.இந்நிலையில், பெர்லின் நகரில் உள்ள ஹெய்டேஸ்ராஸ்ஸி பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த வெடிகுண்டை ஆராய்ந்தபோது, பிரித்தானிய நாட்டு விமானப்படையினரால் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு எனவும், அதன் எடை சுமார் 500 கிலோ எனவும் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, இப்பகுதியில் உள்ள ஹாப்ட்பான்ஹாஃப் மத்திய ரயில் நிலையம், அதன் அருகில் உள்ள பேருந்து நிலையம், ராணுவ மருத்துவமனை ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மேலும், இப்பகுதியைச் சுற்றி சுமார் 800 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும், தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சுமார் 10 ஆயிரம் பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.