இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் : கண் இமைக்கும் நொடியில் இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்!!

349

சென்னை…

சென்னை ராயப்பேட்டை சைவமுத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். துணி இஸ்திரி போடும் தொழில் செய்து வரும் இவர், செவ்வாய்கிழமை இரவு தனது மனைவி சித்ரா, 7 வயது மகன் பார்கவ், இரண்டரை வயது மகள் சாய் தனிஷிகா ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு தியாகராயர் நகர் சென்றார்.

தியாகராய சாலையில் உள்ள மாபொசி சிலை சந்திப்பு அருகில் செல்லும்போது, வேகமாக வந்த கார் ஒன்று ஜெயராமனின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் சாலையில் விழுந்த இரண்டரை வயது குழந்தை தனிஷிகா மீது, விபத்தை ஏற்படுத்திய கார் ஏறி இறங்கியுள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி, அவரது காரிலேயே குழந்தையை ஏற்றி அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதற்குள் காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபருக்குப் பதிலாக வேறொரு நபரை ஏற்பாடு செய்து, காவல் நிலையத்தில் சரணடைய வைத்துள்ளனர்.

உண்மையில் விபத்தை ஏற்படுத்திய நபரை குழந்தையின் பெற்றோர் தொடங்கி அத்தனை பேரும் பார்த்திருந்த நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்த நபரை எச்சரித்து போலீசார் விரட்டியடித்துள்ளனர்.

பின்னர் உண்மையாகவே காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 24 வயது இளைஞரான அஜய் சுப்ரமணியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் என்பதால் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றதாக குழந்தையை பறிகொடுத்த ஜெயராமன் கூறினார்.