இளைஞனை மண்வெட்டியால் அடித்துக்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

219

விருதுநகர்….

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியை சேர்ந்த முருகன் இவரது மகன் முனீஸ் என்ற அனுமான் ( வயது 20). இவர் காரியாபட்டி அச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. கடந்த மார்ச் 4 ந் தேதி காரியாபட்டி கற்றலின் இனிமை பள்ளி அருகில் உள்ள வீட்டின் முன்பு முனீஸ் குடிபோதையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காரியாபட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முனீஸ் இறப்பு குறித்து சந்தேகம் உள்ளதாக அவரது அக்கா குட்டியம்மா கொடுத்த புகாரின்படி காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வந்தனர்.

இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் முனீசின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலின் உள் பகுதியில் காயங்கள் இருப்பதாகவும்,

இவரை அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்தது. உடனே காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்.ஐ அசோக்குமார், ஆனந்தஜோதி தலைமையில் காவலர்கள் சிவபாலன், கார்த்திக்ராஜா, இளையராஜா, சத்தியேந்திரன் ஆகியோர்களை தனிப்படை அமைத்து கொலைக்கு காரணமானவர்களை தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில் மது அருந்துவதில் கூட்டாளிகளான பாபு என்ற கோழிபாபு (வயது 40), அருண்பாண்டிகுமார் (வயது 27) ஆகிய இருவரும் சேர்ந்து முனீஸை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்தபோது,

இறந்துபோன முனீஸ், கோழிபாபு, அருண்பாண்டிகுமார் ஆகிய மூவரும் மது அருந்தி வருவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று மார்ச் 3 ம் தேதி கோழி பாபுவும் அவரது நண்பர் முனீஸ்வரன் என்ற அனுமானும் விறகுவெட்டி விற்பனை செய்த பணத்தில் மது அருந்தியதாகவும், அப்பொழுது கோழிபாபுவின் மனைவி மற்றும் குடும்பத்தினரை முனீஸ் தாறுமாறாக தவறாக பேசியுள்ளார்.

இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த கோழி பாபுவும் அருண்பாண்டிக்குமாரும் வீட்டிற்குள் வைத்து மண்வெட்டியால் முனீசை தாக்கி உடலில் இருந்த ரத்தத்தை கழுவிவிட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை வீட்டிற்கு வெளியில் படுக்க வைத்துவிட்டு கோழிபாபுவும், அருண்பாண்டிகுமாரும் ஓடிவிட்டதாகவும், மயங்கிய நிலையில் இருந்த முனீஸ் இறந்து விட்டதாக மறுநாள் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளனர்.