ஈழத் தமிழர்களை நெகிழ வைத்த புதுமணத்தம்பதி : அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?

362

புதுமணத்தம்பதி..

தமிழகத்தில் தங்கள் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அந்த புதுமணத் தம்பதி இலங்கை அகதிகள் முகாமி உள்ள ஈழத்தமிழர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவருக்கும், குளித்தலை அருகில் இருக்கும் புனவாசிப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு, சிவக்குமார் 1500 பத்திரிக்கைகள் அடித்து, தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்துள்ளார். அதே போன்று மகாலட்சுமி வீட்டில் 1000 பத்திரிக்கைகள் அடித்து, கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திடீரென்று இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதால், 20 பேரைக் கொண்டு இவர்களின் திருமணம் எளிமையாக நடந்தது. இதனால் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஏதேனும், ஒரு நல்ல காரியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சிவக்குமார் யோசித்து வந்துள்ளார்.

இதைப் பற்றி தனது மனைவி மகாலட்சுமியிடம் தெரிவிக்க, அதற்கு மகாலட்சுமி, எங்கள் ஊரின் அருகில் இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 150 ஈழத்தமிழர்கள் வசிக்கிறாங்க. அவர்கள் அனைவரும் கூலி வேலை பார்ப்பவர்கள்.

தற்போது ஊரடங்கு அமுலில் இருப்பதால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு இந்த தொகையை வைத்து ஏதேனும் பொருட்கள் வாங்கிக் கொடுத்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுவும் நல்ல யோசனை என்று மனைவியை பாராட்டியதுடன், அவர் இரும்பூதிப்பட்டியில் உள்ள 150 ஈழத்தமிழர் குடும்பங்களுக்கும் பத்து நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை, இருவரும் வழங்கியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவிய போது, அவர்கள் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்திய போது, எங்கள் திருமண பந்தம் முழுமையடைந்ததாக தோன்றியது என்று கூறியுள்ளனர்.