சாதனை தமிழன்
கே.சிவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விண்வெளித் துறை சார்ந்த விஞ்ஞானி. தற்போது இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) தலைவராக பணியாற்றி வருகிறார்.
கன்யாகுமரியில் உள்ள சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். இவர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றார்.
சுய முயற்சியுடன் கடுமையாக உழைப்பவர். குடும்பத்தினரின் வழிகாட்டுதலின்றி சுயமாக படித்தார். எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. இருந்தும் இவர்தான் குடும்பத்தில் முதல் பட்டதாரி.
எம்.ஐ.டி-யில் (MIT) 1980-ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றார். ஐஐஎஸ்சி பெங்களூருவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
தனது முப்பதாண்டு பணி வாழ்க்கையில் சிவன் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 போன்ற திட்டங்களில் பணியாற்றியுள்ளார். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திட்ட இயக்குனராக இருந்தார்.
2017 பிப்ரவரி மாதம் பி.எஸ்.எல்.வி. 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. அதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. 2015 முதல் 2018 வரை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்தார். பின் கடந்த 10 ஜனவரி 2018 முதல் ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
1963ல் இருந்து 2018க்குள் முதல் முறை ஒரு தமிழன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைமை பொறுப்பு வகிக்கிறார் என்பது பெருமையான ஒன்று.
“நான் தமிழன் என்பதில் எனக்குப் பெருமை, என் ஊர்க்காரர்கள், உறவினர் என்னைக் கொண்டாடுவது எனக்குப் பெருமகிழ்ச்சி. ஆனால், ISROவில் நான் ஒரு இந்தியன், தமிழகத்தைச் சேர்ந்தவன். எல்லா மாநிலத்திலுமிருந்து வந்து இங்கு பணிபுரிகிறார்கள். இங்கு என் தேசத்துக்காக நான் பணிபுரிகிறேன் என்கிறார் சிவன்.